தொடர்புக்கு : 93675 23490,90809 14466, 90037 64607
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் வணங்கி பின்பு தேர்வு எழுதச் செல்ல வேண்டும். பொதுத்தேர்விற்குச் செல்லும் போதும், தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் மாணவர்களை விட அவர்களது பெற்றோர்கள்தான் மிகுந்த ஆவலுடனும், டென்ஷனுடனும் இருப்பார்கள். தங்கள் பிள்ளைகளின் மேல் பெற்றோர்களுக்கு இருக்கும் அக்கறை இந்த உலகில் வேறு யாருக்கும் இருக்க முடியாது. ஆகவே மாணவர்கள் தங்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டிருக்கும் தாயாரையும், தந்தையையும் கண்டிப்பாக வணங்கி, அவர்களுடைய ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொண்டுதான் தேர்வு எழுதச் செல்ல வேண்டும். அடுத்ததாக ஆசிரியரை வணங்க வேண்டும். பெற்றோருக்காவது ஒரு பிள்ளைதான் தேர்வு எழுதச் செல்லுவான், ஆனால் ஆசிரியர்களுக்கோ தன் வகுப்பு மாணவர்கள் அனைவரும் நல்லபடியாக தேர்வு எழுத வேண்டும் என்ற அக்கறையும், எதிர்பார்ப்பும் நிறைந்திருக்கும். அதனால் பெற்றோரைத் தொடர்ந்து ஆசிரியரை வணங்க வேண்டும். அடுத்ததாக நம்மையும் மீறிய ஒரு சக்தி இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறோம் அல்லவா, அந்த இறைசக்தியை வணங்க வேண்டும். தேர்வு எழுதச் செல்லும்போதும், தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போதும் எதிர்பாராத விதமாக எந்தவிதமான தடங்கலும் உண்டாகிவிடக் கூடாது என்று அந்த இறைசக்தியைத் துதிக்க வேண்டும். இந்த நால்வரையும் வணங்கி அதன்பின்பு தேர்வு எழுதச் செல்வதே மாணவர்களுக்கான ஆன்மிக கடமைகள் என்று சொல்லலாம். இதில் இறைநம்பிக்கை இல்லாத பகுத்தறிவு வாதம் பேசுபவர் கூட முதலில் சொன்ன மூவரையும் கட்டாயம் வணங்கிச் செல்வதே நல்லது. அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்ற கூற்றினையும், எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற கூற்றினையும் நினைவில் கொண்டு ஈன்றெடுத்த பெற்றோரையும், கல்வி கற்பித்த ஆசிரியரையும் தெய்வமாக எண்ணி வணங்கி விட்டுத் தேர்வெழுதச் சென்றால் நிச்சயமாக எதிர்பார்க்கும் வெற்றியை மாணவர்களால் பெற இயலும். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.