தொடர்புக்கு : 93675 23490,90809 14466, 90037 64607
உண்டு என்பதையே நம் புராணங்கள் அறுதியிட்டுச் சொல்கின்றன. திருவானைக்காவல், திருக்கோகர்ணம் முதலான ஆலயங்களின் ஸ்தல புராணம் விலங்குகளின் பக்தியை நமக்குச் சொல்கிறது. யானை மற்றும் சிலந்தி பூஜித்த கதையை திருவானைக்காவல் ஸ்தலத்திலும், பசு பால் சொரிந்து சிவபூஜை செய்த கதையை திருக்கோகர்ணம் ஸ்தலத்திலும் அறிந்து கொள்ள முடியும். இவையிரண்டும் உதாரணத்திற்காகச் சொல்லப்பட்டவையே. விலங்குகளால் பூஜை செய்யப்பட்ட ஸ்தலங்களைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. இதுபோன்ற புராணக்கதைகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வட இந்தியாவிலும் உண்டு. ராஜஸ்தானில் உள்ள ஒரு இடத்தில் எலிகளால் பூஜிக்கப்பட்ட அம்பிகையின் ஆலயம் மிகவும் பிரபலம். இந்த வரிசையில் குரங்கு, பாம்பு, நாய், மான், புலி, கரடி என்று பட்டியல் நீள்கிறது. இந்தியாவில் மட்டும்தான் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் உள்ளன என்று தவறாக எண்ண வேண்டாம். நம்மை விட இதுபோன்ற புராணக்கதைகள் எகிப்து நாட்டில் ஏராளம். அங்கு பன்றிகள் வழிபாடு செய்த புண்ணிய பூமி கூட உண்டு. இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்ற கருத்தினை ஏற்றுக் கொள்ளும்போது விலங்குகளுக்குள்ளும் பரமாத்மா என்ற இறைசக்தி நிச்சயமாக இருக்கும் என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இவை எல்லாவற்றையும் விட அன்பு இருக்கும் இடத்தில் நிச்சயமாக ஆண்டவன் இருப்பான். அன்பே சிவம் என்ற தத்துவம் அதனை அறுதியிட்டுச் சொல்லும். பூனை, நாய், பசு, காளை என்ற வளர்ப்புப் பிராணிகள் மட்டுமல்ல, காகம், புறா, கிளி போன்ற பறவைகள் மட்டுமல்ல, யானை, புலி, சிங்கம் முதலான வனவிலங்குகள் மட்டுமல்ல, தொட்டியில் வளர்க்கப்படும் மீன் இனங்களுக்குக் கூட தனது எஜமானனின் மேல் அன்பு செலுத்தத் தெரியும் என்பதை அவற்றை வளர்ப்பவர்கள் நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள். அன்பு என்பதே கடவுளின் உருவம் என்பதாலும், விலங்குகளுக்கும் அன்பு செலுத்தத் தெரியும் என்பதாலும், விலங்குகளுக்கும் இறைபக்தி என்பது நிச்சயம் உண்டு என்ற கருத்தினை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும்.